கடந்த மூன்று மாதங்களில் சீனப்படைகள் இந்திய எல்லையை தாண்டி 30 முறை வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்திய சீன எல்லையன டோக்லாம் பகுதியில் சென்ற வருடம் இரு நாடுகளும் படைகளை குவித்தன. போர் மூளும் என சந்தேகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளும் சமாதானம் ஆகி படைகளை திரும்ப பெற்றது. ஆனால் இன்று வரை லடாக் மற்றும் அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் கூடாரம் அமைத்து தங்கி வருகிறது.
இரு நாடுகளும் தங்களுக்கிடையே சுமுகமான உறவு உள்ளதாக கூறிக் கொள்கின்றன. இந்நிலையில் ராணுவத் தகவலின் படி சென்ற வருடம் மட்டும் சீன ராணுவ வீரர்கள் 423 முறை எல்லை தாண்டி வந்து இந்தியப் படைகளால் தாக்கப்பட்டு திரும்பி உள்ளனர். அதற்கு முந்தைய வருடம் நிகழ்ந்த 273 எல்லை தாண்டும் நிகழ்வை விட இது அதிகம் ஆகும்.
இந்த வருடம் கடந்த மே மாதம் 22ஆம் தேதியில் இருந்து 3 மாதங்களில் சீன ராணுவ வீரர்கள் 30 முறை எல்லை தாண்டி வந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளர். இவர்கள் பல முறை சுமார் 20 கிமீ தூரம் வரை இந்திய எல்லைக்குள் வந்து திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சில நேரங்களில் வான்வழியாகவும் இவ்வாறு எல்லைக்குள் ஊடுருவும் முயற்சி நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

