அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், வேட்பாளர் ஒருவருக்கு எதிராக சூழ்ச்சித்திறனுடன் கூடிய உண்மை நிலவரத்தை திரித்துக்காட்டும் விதமான காணொளி, ‘ரேன்சம்வேர்’ நச்சுநிரல் மூலமாக இணைய வாக்கு இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கும் முறை, அல்லது மின்னியல் வாக்களிக்கும் முறைக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்பி தேர்தல் முடிவுகளையே சந்தேகத்துக்கு உள்ளாக்குவது என இணைய அச்சுறுத்தல்கள் பெருகி வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யர்களின் தூண்டுதலால் ஃபேஸ்புக், மற்ற சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் பெருமளவிலான திரித்துக்கூறும் செய்திகள் பரவி வருவதாக செய்தித் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இது அமெரிக்க மக்களிடையே கவலையைத் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினை குறித்து விசாரிப்பதற்கென அமெரிக்காவில் அமர்த்தப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் முல்லர், இது பற்றிய தமது அறிக்கையில் விரிவாக விவரித்திருப்பதுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்காக பலர் மீது வழக்கும் தொடுத்திருக்கிறார்.
இணைய ஊடுருவல், பொய்த்தகவல் என தேர்தல் தொடர்பாக பெரிய அளவிலான இயக்கம் நடைபெறுவதாகவும் இது ஜனநாயக நாடுகளுக்குப் பெரும் சவாலாக விளங்குவதாகவும் அமெரிக்காவின் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுவதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இதுபற்றிக் கருத்துக் கூறும் மோரிஸ் டர்னர் என்ற தேர்தல் பாதுகாப்பு நிபுணர், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் 2020ஆம் ஆண்டில் பொதுமக்களிடையே தேர்தல் பற்றிய சிந்தனையில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார்.
இதன் தொடர்ச்சியாக நுண்ணறிவுச் செயல்திறனைப் பயன்படுத்தி ஒருவர் சொல்லாததையும் அவர் சொல்வது போன்று காணொளிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார் ‘புருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் சென்டர் ஃபார் டெக்னாலஜி இன்னவேஷன்’ என்ற ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த டேரல் வெஸ்ட் என்பவர்.
இந்த நிலையை எதிர்கொள்ள மைக்ரோசாஃப்ட், கூகல், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் இணைய பாதுகாப்புக் குழுக்கள், எஃப்பிஐ, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு, உளவுத் துறை அதிகாரிகள் ஆகியோர் தேர்தல் முறைக்கு ஏற்பட்டு இருக்கும் அச்சுறுத்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது குறித்து விவாதிப்பர் என்று கூறப்படுகிறது.

