2018 தேசிய ரணவிரு மாத முதலாவது கொடியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த மனிதாபிமான நடவடிக்கையில் தமது உயிர்களை தாய் நாட்டுக்காக தியாகம்செய்த படை வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் வருடாந்தம் இந்த ரணவிரு மாதம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்ததாக ரணவிரு கொடி விற்பனையும் இடம்பெறுகின்றது.
ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகாவினால் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. கடந்த வருடம் கொடி விற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் மாகாண ஆளுநர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் இவ்வருட ரணவிரு கொடிகள் மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
இன்று முதல் ஜூன் 02 திகதி வரையான காலப்பகுதி ரணவிரு மாதமாக ஜனாதிபதி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மூன்று வருட முன்னேற்றம் குறித்து மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட நூல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவினால் ஜனாதிபதி
அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மாகாண ஆளுநர்கள்,மாகாண தலைமைச் செயலாளர்கள். முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.