நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
தனிநபர் பிரேரணையாக இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சகல கட்சிகளினதும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன் தற்போதைய அரசாங்கம் கலைக்கப்படுமாயின் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
இருப்பினும், கூட்டு எதிரணிக்குள்ளும் இதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் உள்ளன. கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மம்பில தலைமையிலான தூய ஹெல உறுமய போன்ற கட்சிகளும் பௌத்த கடும்போக்கு சிந்தனையுள்ள கட்சிகளும் இதனை எதிர்த்து வருகின்றன.