எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் போது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் அதிகாரங்களை இரத்துச் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரச்சாரம் செய்து, இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் இலாபம் பெற சிலர் முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது எனவும் அது குறித்து வருத்தப்படுவதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறியுள்ளார்.
இப்படியான அடிப்படையற்ற விடயங்களை காரணமாக கொண்டு தேவையற்ற அச்சத்தையோ வருத்தத்தையோ ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என சிறுபான்மை மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.