தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருக்கிறது என அமைச்சர் மனோகனேசன் தெரிவித்தார்.
நேற்று(14)ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ சென்.மேரீஸ் மத்திய கல்லூரியில் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான பா.சிவனேசன் மற்றும் பழனிவேல் கல்யாணகுமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி. சுமனசேகர மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் , தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவோம். பேச்சுவார்த்தையில் அரசாங்கம் இணக்கப்பாட்டுக்கு வாராவிட்டால் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக கூறுகிறார்.
அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தாங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் தான் அரசாங்கம் என தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. யார் யாரோடு வேண்டுமானாலும் பேசலாம் அது ஒரு பிரச்சினை அல்ல. நானும் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினேன். அதாவது மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதா? புதிய முறையில் நடத்துவதா? என்பது தொடர்பில் கலந்துரையாடினேன்.
கடந்த காலங்களில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கலந்துரையாடினேன். அது சட்டவிரோதம் அல்ல. ஏன் என்றால் நானும் கலந்துரையாடல் அமைச்சர். அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாரோடு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காபந்து அரசாங்கம் வராது. காபந்து என்றால் ஆபத்து என்று அர்த்தம்.