தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் ஆண் செய்தியாளரை ‘ஹேண்ட்சம்’ ஆக இருக்கிறீர்கள் என கூறியதற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெண் தொகுப்பாளர் வேலை இழந்துள்ளார்.
குவைத் நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தில் பஷிமா அல் ஷம்மர் என்ற பெண் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொகுப்பாளர் பஷிமா, சக ஊழியரும், செய்தியாளருமான நவாப் அல் ஷாரக்கை, நேரலையில் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டுக் கொண்டு இருந்தார்அப்போது நவாப் தனது தலையில் கட்டியிருந்த துணியை சரி செய்தார். இதை பார்த்த பெண் தொகுப்பாளர், ‘‘நீங்கள் ஹேண்ட்சம் ஆக தான் இருக்கிறீர்கள். தலையை சரி செய்ய வேண்டாம்’’ என கூறினார்.
பஷிமாவின் பேச்சு, நேரலையாக ஒளிபரப்பாகி விட்டது. கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள குவைத் நாட்டில் நேரலையில் இதுபோன்று பெண் தொகுப்பாளர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பார்வையாளர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொலைக்காட்சி நிறுவனத்திடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்த பெண் தொகுப்பாளரை தொலைக்காட்சி நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
அதேசமயம், ஹேண்ட்சம் என்று கூறியதற்காக பெண்ணை வேலையில் இருந்து நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல நாடுகளிலும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

