கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் தனுஜ் லக்மாலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான கருவாத்தோட்டம் பொலிஸார், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணைகளின் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.