ஹஜ் கடமைக்காக வருபவர்களுக்கு சவூதி அரேபியா தனது கட்டார் நாட்டு எல்லையை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஹஜ் கடமையில் ஈடுபடும் கட்டார் பிரஜைகள் மின்னணு அனுமதிகள் இன்றி வருவதற்காக சல்வா எல்லை கடவை திறந்து விடப்படும் என்று சவூதியின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டாரிலுள்ள ஹஜ் கடமையை நிறைவேற்ற வருபவர்கள் அனைவரையும் அழைத்து வர தனது தனிப்பட்ட செலவில் சவூதி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றை டோஹா விமானநிலையத்திற்கு அனுப்பும்படி சவூதி மன்னர் உத்தரவிட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதியின் இந்த அறிவிப்பு குறித்து கட்டார் அரசு நேற்று வரை எந்த பதிலும் அளிக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.
இம்முறை ஹஜ் கடமையில் பங்கேற்கும் கட்டார் நாட்டவர்களுக்கு சவூதி அரசு கடந்த மாதம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக சவூதி அங்கீகரிக்கு விமான சேவை ஒன்றின் உடாகவே நாட்டுக்கு வர வேண்டும் என்றும் சவூதி கூறியிருந்தது.
கட்டார் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை சவூதி, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் துண்டித்தது முதல் சல்வா எல்லைக் கடவை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.