ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மற்றும் நிருவாகம் என்பவற்றின் கீழ் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கு தான் தயாரில்லையெனவும், உடனடியாக இந்த தலைமையிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீங்கிக் கொண்டு, புதிய நிருவாகிகள் நியமிக்கப்படாது போனால் தான் தொடர்ந்தும் கட்சியின் பிபில தொகுதி அமைப்பாளர் பதவியில் இருக்கப் போவதில்லையெனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டியதில்லை. கட்சி உறுப்பினர்களான எம்மிடம் கேட்டிருக்க வேண்டும்.
முறையான ரீதியில் மக்கள் ஆணைக்கு தலைசாய்த்து அரசாங்கத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் ஒப்படைக்க வேண்டும். தன்னுடன் 40 பேர் இருந்தாலும் பரவாயில்லை. பாராளுமன்றத்தில் தான் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து பாராளுமன்றத்தில் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதாக கேள்விப்பட்டேன்.
எது எப்படிப் போனாலும் கட்சியில் மாற்றம் வரவில்லையாயின் அதனுடன் இணைந்து அரசியலில் ஈடுபட தான் ஒருபோதும் தயாரில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

