ஐக்கிய தேசியக் கட்சி என்னதான் சொன்னாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தமது கட்சி எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையென விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியின் கீழ் நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் 2020 வரை முன்னெடுத்துச் செல்லப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்த நேற்று (15) தெரிவித்த கருத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடன்படுகின்றதா? என வினவியதற்கே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாம் ஐ.தே.க.யிடம் பல்வேறு அறிவிப்புக்களை செய்தோம். அதில் எந்தவொன்றுக்கு அவர்கள் உடன்பட வில்லை. விசேடமாக பிரதமரை மாற்றுமாறு கூறினோம். இதனையாவது அவர்கள் செய்வதற்கு தயாரில்லை எனவும் அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றங்களை செய்வதற்குப் பகரமாக ஐ.தே.க.யின் பின்னாசன உறுப்பினர்கள் தனியாட்சி அமைக்கப் போவதாக “பைலா” அடித்துக் கொண்டு திரிவதற்கு ஆரம்பித்தனர். எமக்கு சவால் விடுக்க ஆரம்பித்தனர். நாம் சவாலுக்கு தயார். ஸ்ரீ ல.சு.க. தலைமையிலான அரசாங்கம் அமைக்க தற்போதைக்கே நாம் தயாராகவுள்ளோம். இதற்குத் தேவயான பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை காட்டுவதற்கும் எமக்குத் தெரியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.