ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணடைந்துள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாடு செய்த ஊடக மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த அவர், ஊழல் மோசடிளுடன் தொடர்புள்ளவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார். அதேபோல கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆதரவளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்கின்றார். சஜித் பிரேமதாசவுக்கு அவரின் ஆதரவு இருப்பது அவரின் கருத்துகள் மூலம் உறுதியாகிறது.
இந்த அரசாங்கத்திலும் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர் சஜித் பிரேமதாசவைப்போல் அர்ப்பணிப்புடன் மற்றும் நேர்மையாக சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகள் யாரும் இல்லையென ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவித்திதுள்ளார். ஆனால், அவ்வாறான நல்லவர்கள் இல்லாத பொதுஜன பெரமுனவுக்குத்தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்கின்றது. சு.கவின் தீர்மானம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருந்த வாக்கு வங்கியும் இல்லாமல் போயுள்ளது. கட்சி ஆதரவாளர்களைத் தலைவர்கள் காட்டிக் கொடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், கோட்டாபய ராஜபக்ஷ்வின் தேர்தல் மேடைகளில் ஏறும்போது அவர்களுக்கு எதிராக பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கூச்சலிடுகின்றனர்.அதனால், அவர்களின் மேடைகளில் ஏறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இனவாதம் பேசிய அனைவரும் இன்று ஓர் அணியில் இருக்கின்றனர். ரத்தன தேரர், ஹிஸ்புல்லாஹ், சிலோன் தெளஹீத் ஜமாத்தைச்சேர்ந்த அப்துர் ராஸிக் ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். ஹிஸ்புல்லாவின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷ்வுக்குத்தான் என்பதை எஸ்.பி. திஸாநாயக்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இவ்வாறான அனைவரும் ஓர் அணியில் இருப்பதன் மூலம் கடந்த காலத்தில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஏற்படுத்தி வந்தவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

