ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே அதன்மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே அடிக்கடி தெரிவித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி அக்கருத்தை தெரிவித்து வந்தனர்.
எனினும் அவ்வாறு அந்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தை தற்போது நடைமுறைப்படுத்தும் காலம் வந்துள்ளது. எனவே அதனை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் தயாரான நிலையில் உள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 44 பேரும் பொதுவான தீர்வு ஒன்றுக்கு வர வேண்டும். அப்போதுதான் நடைமுறைச்சாத்தியமான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என கூறினார்.