மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு 10 மணிக்கு துபாயில் இருந்து மும்பை வந்து சேர்ந்தது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீதேவி உடல் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லோகண்ட்வாலா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்றிரவு அவர் உடலுக்கு போனிகபூர் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி உடல் லோகண்ட் வாலாவில் உள்ள “செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்”புக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.
இன்று அதிகாலையில இருந்தே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் வரிசையாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகைகள், ஹேமமாலினி, ஐஸ்வர்யாராய், ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, சுஷ்மிதா சென், மாதுரிதீட்சித், சோனம் கபூர், தபு, கஜோல், நடிகர்கள் அஜய்தேவ்கான், அக்ஷய்கன்னா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தி திரை உலகைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக திரண்டு வந்தி ருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். ரசிகர்கள் செல்போன், காமிரா எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
இடையிடையே திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மதியம் 12.30மணி வரை ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
மதியம் 1 மணிக்கு ஸ்ரீதேவி உடலுக்கு போனி கபூர் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் அந்த சடங்குகள் நீடித்தது. 2 மணிக்கு பிறகு ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ஸ்ரீதேவி உடலை தகனம் செய்ய மும்பை வில்லேபார்லி மேற்கு பகுதி யில் எஸ்.வி.சாலையில் உள்ள வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30மணிக்கு ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்படுகிறது.
மாநில அரசின் மரியாதையுடன் அவர் உடல் தகனம் நடைபெறும். இதற்காக மும்பை போலீஸ் பேண்டு வாத்திய குழு சோக இசை முழங்கியபடி தகனம் செய்யயும் இடத்திற்கு சென்றடைந்தது.