இரண்டு கல்லி ஃபீல்டர்கள் நிற்கவைத்து கனே வில்லியம்சனைக் காலி செய்திருந்தார் கீமர் ரோச். இன்றைய அளவில் கிரிக்கெட்டின் டாப்-4 பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் வெறும் 1 ரன்னில் வெளியேறியிருந்தார். இது நடந்தது நேற்று, வெல்லிங்டன் மைதானத்தில். இன்று அந்த டாப்-4-ன் மற்ற மூவரும் தத்தமது அணிகளுக்காகக் களமிறங்கினர். அடிலெய்ட்…ஆஷஸ் தொடரின் 2-வது போட்டி. அறிமுக வீரர் ஓவர்டன் பந்துவீச்சில் போல்டானார் ஸ்டீவ் ஸ்மித். 40 ரன்கள் எடுத்திருந்தாலும், தன் அணியைக் கொஞ்சம் தடுமாற்றமான நிலையில்தான் விட்டுச்சென்றார். இப்படி இரு வீரர்களும் சீக்கிரம் வெளியேறிவிட, இந்தியத் தலைநகரில், தன் சொந்த மண்ணில், தன் 20-வது சதமடித்து, ரன்வேட்டையைத் தொடர்கிறார் விராட் கோலி.
ஆட்டத்துக்கு ஆட்டம் சாதனை படைப்பது கோலிக்கு ஹாபி. 25 ரன் எடுத்தபோது, டெஸ்ட் அரங்கில் 5,000 ரன்களைக் கடந்தார். அதிரடியைத் தொடர்ந்து சதத்தையும் நொறுக்க, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமை. தன் சொந்த மண்ணில் சதமடித்த இரண்டாவது இந்தியக் கேப்டனும் அவரே. வழக்கம்போல ஜாலியாக, கூலாக ‘கைப்புள்ள’ இலங்கையைப் பந்தாடினார். முதலில் ஒருநாள் போட்டிபோல் அடித்து ஆடியவர், பின்னர் கியரைக் குறைத்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் கோலி 156 நாட் அவுட்.
ரங்கனா ஹெராத் இருந்தபோதே இலங்கையின் பந்துவீச்சு பஞ்சரானது. இந்தப் போட்டியில் அவரும் இல்லை. வந்த வேகத்தில் சரவெடி காட்டத் தொடங்கினார் விராட். ஸ்பின்னர்களை ஈவுஇரக்கமின்றி வெளுத்தார். வழக்கமான ஆன் சைட் ஃப்ளிக், கவர் ஷாட்களுக்கு மத்தியில், ஸ்வீப் ஷாட் கூட அடித்தார்! ஸ்பின்னர்கள் பந்துவீசுகையில், 1 மீட்டருக்கும் மேல் ‘ஃப்ரன்ட் ஃபூட்’ எடுத்து வைத்து அதை எதிர்கொண்டார். டெக்னிக்கலாகப் பார்க்கையில், கோலியின் ஆட்டம் நூற்றுக்கு நூறு. அவ்வளவு தெளிவு. ஒரு ஷாட்டிலும், கொஞ்சம் கூடப் பிசிறில்லை. ஸ்டெடியாக ஆறாவது இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்.
நாக்பூர் டெஸ்ட்டில் கோலி சதமடிக்க, அதே நேரம் பிரிஸ்பேனில் சதமடித்திருந்தார் ஸ்மித். இன்றும் அங்கே ஸ்மித் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மிகவும் பொறுமையாகவே இங்கிலாந்தின் அட்டாக்கை எதிர்கொண்டார். மூன்றே பவுண்டரிகள்தான். வீழ்ந்துவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனம். ப்ராட், ஆண்டர்சனை எச்சரிக்கையோடு எதிர்கொண்டவர், வோக்ஸ் ஓவரை மட்டும் அவ்வப்போது பதம்பார்த்தார். அனுபவ வீரர்களிடம் காட்டிய எச்சரிக்கை, அறிமுக வீரனிடம் இல்லாமல்தான் இருந்தது. க்ரெய்க் ஓவர்டன் பந்தில் போல்டு! 5 ஆண்டு கவுன்ட்டி வாழ்க்கைக்கு இப்படியொரு பரிசு அந்த 23 வயது வேகப்பந்துவீச்சாளருக்கு. முதல் போட்டியே ஆஷஸ்… முதல் விக்கெட்டாக உலகின் டாப் டெஸ்ட் பேட்ஸ்மேன். ஓவர்டன் மகிழ்ச்சியில் திளைக்க, கவலை தோய்ந்த முகத்தோடு வெளியேறினார் ஸ்மித்.
மறுபுறம், பக்கத்து நாட்டுத் தலைநகர் வெல்லிங்டனில் வில்லியம்சன் படு ஹேப்பி. பேட்டிங்கில் சொதப்பியிருந்தாலும், சக வீரர்களின் பொறுப்பான ஆட்டம் தன் அணிக்கு மாபெரும் முன்னிலை ஏற்படுத்திவிட்டதே! இரண்டாவது விக்கெட்டாக அவர் வெளியேறியபோது ஸ்கோர் 68. கொஞ்சம் சுமாரான ஸ்கோர்தான். இன்று காலை மூன்றாவது விக்கெட்டாக ராவல் வெளியேற்றப்பட, பிரஷர் கூடியது. அனுபவ ராஸ் டெய்லருடன் இணைந்தார் ஹென்றி நிக்கோல்ஸ். இந்த இணை 124 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் நிதானமடைந்தது. இருவரும் 10 ஓவர் இடைவெளியில் வீழ்ந்துவிட, 272 ரன்னுக்கு 5 விக்கெட். அப்போதுதான் சூறாவளியாகக் கிளம்பினார் காலின் கிராந்தோம். ஒருநாள் போட்டிபோலக்கூட அல்ல, டி-20 போல ஆடினார். 74 பந்துகளில் 105 ரன்கள். கீப்பர் ப்லண்டல் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து 313 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.