ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மூத்த மகனான ரொபர்ட் முகாபே ஜூனியர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றில் கார்கள் மற்றும் வேறு சொத்துகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் நடவடிக்கையினால் 12,000 அமெரிக்க டொலர் (43 இலட்சம் இலங்கை ரூபா, சுமார் 10 லட்சம் இந்திய ரூபா) பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 வயதான ரொபர்ட் முகாபே ஜூனியர் பொலிஸ் நிலையமொன்றில் இரவை கழித்த பின்னர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
2017 இல் ரொபர்ட் முகாபேயுடன் ரொபர்ட் முகாபே ஜூனியர்
ரொபர்ட் முகாபே ஜூனியரின் 31 வயதான நண்பர் ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார்கள் மற்றும் வேறு சொத்துகளை சேதப்படுத்தியமை, பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் ரொபர்ட் முகாபே ஜூனியர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக ரொபர்ட் முகாபே ஜூனியரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.