தேசிய மக்கள் சக்தி ஆட்சியைப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகின்ற நிலையிலும், இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாமலுள்ளன. குறிப்பாக வேலையற்ற பட்டதாரிகளின் விவகாரத்தில் அரசாங்கம் அசமந்த போக்குடனேயே செயற்பட்டு வருகிறது. கடந்த காலங்களைப் போன்று இந்த ஆட்சியிலும் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆட்சியைப் பொறுப்பேற்று சுமார் ஒரு வருடம் நிறைவடைகிறது. ஆனால் இன்றும் நாட்டில் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் தொழில் இன்றி வீதிகளிலயே காத்திருக்கின்றனர். தேர்தல் காலத்தில் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வாக ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் கொள்கை அறிக்கையின் 72ஆம் பக்கத்தில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இவற்றில் எதுவும் இதுவரை இவர்களால் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆட்சியிலும் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது.
35 000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என்றும் இவர்களில் 20 000 பேருக்கு ஆசிரியர் தொழில் தருவோம் என எவ்வாறு வேலை வழங்கப்படும் என்பதும் இந்த அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களம், இறைவரித் திணைக்களம், சுற்றுலாத் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆட்சேர்ப்புகளை செய்வோம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். பட்டதாரிகள் இவற்றில் உள்வாங்கப்படுவர் என்று வாக்குறுதியளித்தனர். ஆனால் தேர்தல்களில் வெற்றி பெற்றதன் பின்னர் அரசாங்கத்தால் இந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ள போதிலும், பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்குடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரதேச, மாவட்ட, மாகாண ஒன்றியங்களில் உள்ளவர்களுக்கு வாக்குறுதிகளுக்கு மேல் வாக்குறுதிகளை வழங்கி, பட்டதாரிகளைப் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி, தமது வாக்குகளை அதிகரித்து வெற்றி பெற்றாலும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த சகலரும் பட்டதாரிகள் விடயத்தில் இன்று கரிசனை செலுத்துவதாக இல்லை. சகலரும் அவர்களை புறக்கணித்து வருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்திற்கு பயந்து தான் அரசாங்கமும் ஜனாதிபதியும் இவ்வாறு தொழில் வழங்காதிருக்கின்றனரோ என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
முந்தைய அரசாங்கத்தைப் போலவே, இந்த அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துக்கு பயந்து, இளைய தலைமுறையினரின் கனவுகளை குழிதோண்டி புதைத்து வருகிறது. இந்த வேலையற்ற பட்டதாரிகள் என்போர் வெறுமனே அரசியல் கைப்பாவைகள் அல்லர். மாறாக படித்த, அறிவுச் சமூகத்தினர் ஆவர். இவர்கள் நாட்டின் வளங்கள் ஆகும். இவர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
இந்தப் பட்டதாரிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இவர்களை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். இருந்தாலும் இவ்வாறான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இப்போதாவது இவர்களை தொழிலுக்கமர்த்தி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கி, அத்தியாவசிய துறைகளில் ஈடுபடுத்த வேண்டும். இந்த ஏமாற்று அரசியல் முறையை நிறுத்த வேண்டும். வேலையற்ற பட்டதாரிகளின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்பதால், இவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.