இயேசு பிரான் அவதரித்த திருநாளில் அன்பு வழியை அனைவரும் பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ உறுதி ஏற்போம் என் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்மஸ் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்!
இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், கிறிஸ்துவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களின் வாசலில் வண்ண நட்சத்திரங்களைக் கட்டி, கிறிஸ்மஸ் மரம் மற்றும் இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் குடில் அமைத்து, வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு, உற்றார், உறவினர்களுடன் விருந்துண்டு மகிழ்ச்சியுடன் கிறிஸ்மஸ் திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள்.
‘‘வழி தவறிய ஆட்டை தேடிச் சென்று மீட்கும் மேய்ப்பன் போன்று, பாவம் எனும் முள்ளிடையே நிற்கும் மனிதர்களையும் தேடிச் சென்று மீட்பது என்னுடைய பணி” என்றுரைத்த இயேசுபிரான் அவதரித்த திருநாளில், அத்திருமகனார் போதித்த, அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.
அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்கிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

