கலப்பட சர்க்கரையால் தரமான நாட்டு சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அதிர்ச்சி அயடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட ஆலைகளில் விவசாயிகள் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்கின்றனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரை, மார்க்கெட்டில் முதல் தரம் கிலோ ₹45க்கும், 2ம் தரம் ₹35க்கும், மூன்றாம் தரம் ₹28க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அஸ்கா சர்க்கரை, கடைகளில் ஒரு கிலோ ₹40 வரை விற்பனை ஆகும் நிலையில் நாட்டு சர்க்கரை ஒரு கிலோ ₹60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை கவுந்தப்பாடி சர்க்கரை மார்க்கெட்டிற்கு வாரம் தோறும் சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மூட்டை வரை சர்க்கரை வரத்து இருந்து வந்தது.
வறட்சி, தரமான சர்க்கரைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் கடந்த சில மாதங்களாக வாரம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மூட்டை மட்டுமே வரத்து உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் 250க்கும் மேற்பட்ட ஆலைகளில் விவசாயிகள் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்கின்றனர்.
இவர்கள் வாரம் 30 மூட்டை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. இதே பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட தனியார் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்து நாட்டு சர்க்கரை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இவற்றில் பெரும்பாலும், மகாராஷ்டிராவில் இருந்து வரும் வெள்ளை சர்க்கரை, ஹைட்ரோஸ், யூரியா, டெகோலைட் போன்றவற்றை பயன்படுத்தி வாரத்திற்கு 200 முதல் 250 மூட்டை வரை நாட்டுசர்க்கரை உற்பத்தி செய்கின்றனர்.
இந்த கலப்பட சர்க்கரை சிறிது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தரமான சர்க்கரை சிறிது கருப்பு நிறத்தில் இருப்பதாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பொதுமக்கள் தரமான சர்க்கரையை வாங்காமல், கலப்பட சர்க்கரையை வாங்கி செல்கின்றனர்.
இதனால் தரமான நாட்டு சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் கடந்த ஒரு ஆண்டாகவே நாட்டு சர்க்கரை உற்பத்தி சுமார் 50 சதவீதம் குறைந்து விட்டது. இவ்வாறு கூறினர்.

