சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களுக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். அருண் விஜய்யுடன் நடித்து வந்த மாபியா படம் பிப்ரவரி 21-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில், மாபியா எனக்கு முக்கியமான படம். பாசிட்டிவான மனிதர்கள் கொடுத்த இப்படம் அடுத்த லெவலுக்கு என்னை கொண்டு செல்லும். என்னை வித்தியாசமான கதாபாத்திரத்தில் வைத்து யோசித்ததற்கு இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு நன்றி. மேயாதமானில் பாடல் எழுதிய விவேக், இந்த படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார். சிறப்பான பாடல் கொடுத்திருக்கிறார்.
படத்தில் அருண் விஜய் – பிரசன்னாவை ஹீரோ, வில்லன் என பிரித்துப் பார்க்கவில்லை. இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். இந்தபடத்தில் அருண் விஜய்யுடன் தான் எனக்கு காட்சிகள், பிரசன்னாவுடன் சீன் இல்லை. இயக்குனர் கார்த்திக் நரேன், என்ன வேணும் என்பதை சரியாக கேட்டு வாங்கக்கூடியவர். கூடுதலாக ஒரு காட்சி கூட எடுத்திருக்க மாட்டார்.
அருண் விஜய்யிடம் என் அன்பை பல தடவை சொல்லியிருக்கிறேன். பாசிட்டீவான நடிகர். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேசனாக இருக்கிறார். வெற்றிக்காக காத்திருந்த நாட்களில் அவரது கண்ணியமும், விடாமுயற்சியும் அவரது வெற்றியை அழகாக மாற்றியிருக்கிறது. பிரியம் படத்தில் தில்ரூபா பாடலில் பார்த்த அதே அருண் மாதிரியே 25 வருடத்திற்கு பிறகும் இருக்கிறார். சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக இரவு படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் அதிகாலை 3 மணிக்கே ஜிம்மிற்கு செல்கிறீர்கள். ஆனால் ஜிம்மிற்கு அடுத்த நாள் காலை கூட செல்லலாம். படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டிற்கு செல்லுங்கள். உங்கள் மனைவி ஆர்த்தி காத்துக் கொண்டிருப்பார் என்று அருண் விஜய்க்கு அன்பான அட்வைசும் கொடுத்தார் பிரியா பவானி சங்கர்.

