மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பொதுமக்கள் சிலர் இடம்பெயர்ந்துள்ளதோடு, பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவு பெரியகுளம், கொவில் போரதீவுக்குளம், வெல்லாவெளிக்குளம், பொறுகாமம் குளம், பழுகாமம் குளம், வட்டிக்குளம் மற்றும் தும்பங்கேணிக்குளம் உள்ளிட்ட சிறியகுளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் பட்டாபுரம், பெரியபோரதீவு, பழுகாமம், வேத்துச்சேனை, போன்ற பல தாழ் நிலப் பகுதிகளிலும் உள்ளூர் வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
போரதீவுப்பற்றுப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையை நம்பி மேற்கொள்ளப்படும் பெரும்போக வேளாண்மைச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதோடு, சோளம், நிலக்கடலை, கௌபி, பயறு உள்ளிட்ட மேட்டுநிலப் பயிற் செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் அடைமழையினால் வேளாண்மைச் செய்கை உள்ளிட்ட அனைத்து பயிரினங்களும் வெள்ளத்தில் அள்ளுண்டுபோய் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வெளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் தேங்கி நிற்கும் வெள்ளநீரையும் ஓடவைக்கும் பணியில் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகம் ஈடுபட்டு வருகின்றது.
தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, இன்று (புதன்கிழமை) காலையிலிருந்து மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால், மக்கள் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கும், தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, விவேகானந்தபுரம் – காக்காச்சுவட்டை வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்துவோர் பலத்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனையுடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

