பொதுமக்களின் அபிலாஷைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் நோக்கில் தமது கடமைகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டிய நேரம் தற்சமயம் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை தலைவர்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்த வேளையில், ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை, பொதுமக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதனால், தமக்கு இந்த மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தனர் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு 19ஆவது அரசியல் திருத்தம் பாரிய நெருக்கடியாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, மக்களின் அபிலாஷைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு பலமான பாராளுமன்ற அதிகாரம் அவசியம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, 2015ம் ஆண்டுக்கு முன்னர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாடு தொடர்பில் கொண்டிருந்த நம்பிக்கை, மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டார்.

