மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான வீதியில், பாலக்காடு சந்தியில் இன்று பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் அதிகவேகத்துடன், உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான இருவரும் வவுணதீவு பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் புதியகாத்தான்குடி 03ஆம் வட்டாரத்தை சேர்ந்த கே.ஆர்.எம்.ஹாரஸ் (23வயது) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உயிரிழந்த இளைஞர் தொழில் நிமித்தம் நாளை மறுதினம் மலேசியாவிற்கு பயணமாகவிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதுஇ
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.