ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசியல் கட்சி மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை 15.02.2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எமது அழைப்பின் பேரில் வருகை தந்திருக்கும் அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் அன்புடன் வரவேற்கின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். வெற்றி பெற்று இங்கு வருகைதந்துள்ள உறுப்பினர்களைப்போன்று வெற்றி பெறாத எமது அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். எந்தவொருவரையும் நாம் மறந்துவிட முடியாது. வெற்றியடையாத போதும் அனைத்து கிராமங்களிலும் எமது பிரதிநிதிகள் உள்ளனர். எனவே வெற்றியடைந்தவர்களை போன்று தெரிவு செய்யப்படாதவர்களையும் நாம் கைவிடமாட்டோம் என்பதை மறந்துவிட வேண்டாம். கட்சி மற்றும் அரசாங்கம் என்றவகையில் அவர்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நாம் தயாரிப்போம்.
தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் ஒருபோதும் கவலையடையவோ அல்லது பின்னடையவோ தேவையில்லை. ஜனநாயகம் நிலவுகின்ற உலக நாடுகளில் அரசியல் கட்சிகள் தோல்வியடைவதும் வெற்றிபெறுவதும் சாதாரணமானதாகும். கட்சியினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு வெளியே அல்லது கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக எந்தவொரு உள்ளூராட்சி சபையையும் அமைப்பதில் எமது உறுப்பினர்கள் தனிப்பட்ட முடிவுகளை மேற்கொண்டு செயற்படுவார்களாக இருந்தால், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக தலைவர்கள் உப தலைவர்களை தெரிவு செய்கின்றபோது வாக்களிப்பார்களாக இருந்தால் எவ்வித மன்னிப்புமின்றி அவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவர். தற்போதைய சட்டத்தின்படி அப்படி நீக்குவது இலகுவானதாகும்.
எமக்கு தெளிவான கொள்கையும் நோக்கமும் உள்ளது. இதன்போது நல்லிணக்கம், தேசிய ஐக்கியம், ஜனநாயகம், சுதந்திரம் இதுபோன்ற பல விடயங்கள் பட்டியலில் உள்ளன. தேசிய அரசியலில் போன்று பிரதேச அரசியலிலும் உள்ளூராட்சி மன்ற அரசியலிலும் ஊழல், மோசடி, இலஞ்சம் போன்ற விடயங்கள் இல்லாமல் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே இந்தப் பட்டியலில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட விடயங்களாக உள்ளன. உறுப்பினர்கள் என்றவகையில் தெரிவுசெய்யப்பட்டதுமே 50 இலட்சம், 100 இலட்சம் என விலைபோவார்களாக இருந்தால் எமது நோக்கம் என்ன? அப்படி நடைபெறுமாக இருந்தால் முதலாவது சபை கூட்டத்திலேயே நாம் ஊழலுக்கு உட்பட்டுவிட்டோம். இந்த பெறுபேறுகளை கண்டு கவலைப்பட வேண்டியதில்லை. புத்தரின் முதலாவது சமய உரைக்கு செவிமடுத்தவர்கள் ஐந்துபேர் மட்டுமே. இன்று உலகில் புத்தரின் போதனைகளுக்கு செவிசாய்க்கும் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர்.
நாம் சளைக்காது எழுச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் மன தைரியத்துடனும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நான் தேர்தலின்போது குறிப்பிட்டதைப்போன்று அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வெற்றிபெற்றிருக்கின்ற இந்த உறுப்பினர்களுக்கு அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களுக்குத் தேவையான வளங்களையும் நிதியையும் குறைவின்றி பெற்றுக் கொடுப்போம். நான் இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக தேர்தலின்போது குறிப்பிட்டதைப்போன்று எமது அரசியல் சுலோகமாக இருந்த ஊழல், மோசடி வீண்விரயத்திற்கு எதிரான விரிவான தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளேன். அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி சமயத் தலைவர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் இதற்கு பங்களிப்பு செய்ய விரும்புகின்ற அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேச உதவியையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும்.