‘புரட்சித் தளபதி’ நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘லத்தி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் ஏ. வினோத்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘லத்தி’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பிரபு, ஏ. வெங்கடேஷ், முனீஸ்காந்த், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பாலசுப்பிரமணியன் மற்றும் பாலகிருஷ்ணா தொட்டா என இருவர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஆண்டின் இறுதியில் வெளியாகிறது. இம்மாதம் 22 ஆம் திகதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.
இதில் விஷால் கான்ஸ்டபிள் முருகானந்தம் எனும் கதாபாத்திரத்தில் ‘லத்தி’ ஸ்பெஷலிஸ்ட்டாக தோன்றுகிறார். இந்திய முழுவதும் உள்ள காவல்துறையில், பொதுவெளியில் அனுமதி இல்லாமல் கூடும் கூட்டத்தினரை கலைக்கவும், போராட்டங்களை கட்டுப்படுத்தவும், ‘லத்தி’ எனும் மரத்தாலான பிரத்யேக ஆயுதம் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இதனை கையாளுவதில் நிபுணராக கதையின் நாயகனை வடிவமைத்து ‘லத்தி’ படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இது விஷாலுக்கு பொருந்தியிருக்கும் அளவிற்கு, ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுமா..!? என்பது படம் வெளியானதும் தெரியவரும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.