நடிகர் கௌஷிக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘உழவர் மகன்’ எனும் திரைப்படம் -விவசாயிகளை பற்றியும் , விவசாயத்தைப் பற்றியும் சமூகப் பொறுப்புணர்வுடன் பேசுகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ப. ஐயப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘உழவர் மகன் ‘ திரைப்படத்தில் கௌஷிக் ,சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ், விஜித் சரவணன், யோகி ராம் ,ரஞ்சன் குமார், சிவ சேனாதிபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை சுபலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே .முருகன் தயாரித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” மக்களுக்கு சோறு போடும் விவசாய தொழில் இன்று பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது. அந்தத் தொழிலை மேற்கொண்டிருக்கும் விவசாயிகள் சொல்ல முடியாத துன்பத்தை சந்தித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சனையின் தீவிரத்தையும் அதற்கான தீர்வையும் சொல்லி இருக்கிறோம். அத்துடன் காதலும், சமூகத்திற்கு தேவையான செய்தி ஒன்றினையும் இப்படத்தில் வழங்கியுள்ளோம்” என்றார்.