விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று மாவட்டச் செயலர் ஊடாக விவசாய அமைச்சருக்குப் பரிந்துரைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது எரிபொருள்கள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள்களைப் பயன்படுத்தித் தொழில் செய்வோருக்கு மானிய விலையில் அவற்றை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு மானிய விலையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது. அதைப் போன்று விவசாயிகளுக்கும் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.மாவட்ட செயலர் தலைமையிலான குழு அதை ஏற்றுக் கொண்டது. விவசாய அமைச்சுக்கு இது தொடர்பில் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.