பெல்லன்வில ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பேராசிரியர் விமலரத்ன தேரரின் இறுதிக்கிரியைகள், இன்று (வியாழக்கிழமை) பூரண அரச மதியாதையுடன் நடைபெறவுள்ளன.
ஜயவர்தனபுர பல்கலைக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள தேரரின் இறுதிக்கிரியையில், அரசின் உயர்மட்ட அதிகாரிகள், சமய தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நண்பகல் 12.30 மணிமுதல் பொரலஸ்கமுவ மற்றும் பெப்பிலியான வீதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் செயற்படுத்தப்படவுள்ளதோடு, ஜயவர்தனபுர பல்கலைக்கழக திசை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
77 வயதான பேராசிரியர் விமலரத்ன தேரர் கடந்த 2ஆம் திகதி விஹாரையில் வளர்க்கப்பட்ட யானை தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் ஏற்பட்ட மாரடைப்பால் தேரர் கடந்த 3ஆம் திகதி இயற்கை எய்தினார்.
சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்ட விலரத்ன தேரர் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட ஒருவர். நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அதிக கரிசனை கொண்டிருந்த தேரர், மொழி, கலை, இலக்கியத்திற்காக அரும்பணியாற்றியவராவார்.