அரசாங்கம் தம்மீதான விமர்சனங்களை மறைப்பதற்காக அரச அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். செய்மதி தொடர்பில் தகவல் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அது குறித்த உண்மையான நிலைவரத்தை கண்டறிய முயற்சிக்குமாறு வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகலில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமரின் கூற்றுக்கு முரணான கூற்றினை அமைச்சரவை அமைச்சரொருவர் தெரிவித்துள்ளமையானது பாராளுமன்றத்தின் பொறுப்பு கூறல் மற்றும் சம்பிரதாயத்தை மீறும் செயலாகும். தாம் கூறிய பொய்களை மீண்டும் மீண்டும் தெரிவித்து அவற்றை நியாயப்படுத்துவதையே இந்த அரசாங்கம் செய்து வருகிறது.
இது தொடர்பில் தகவல் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, செய்மதி தொடர்பில் உண்மையை நிலைவரத்தை கண்டறிய முயற்சிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
தமக்கு தேவையான பதிலை வழங்காததால் அதிகாரிகளை பழிவாங்குவதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளரின் மனைவியே முதலீட்டு சபையின் பிரிவொன்றின் பணிப்பாளராக பணியாற்றுகின்றார்.
இவர்களது அனுமதியின்றி, பிரதமர் அலுவலகத்தின் அனுமதியின்றி ஏனைய அதிகாரிகள் தகவல்களை வழங்கியிருக்க வாய்ப்பில்லை. எனவே தம்மீதான விமர்சனங்களை மறைப்பதற்காக அரச அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம்.
இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அரச சேவையை விமர்சித்திருந்தார். அதாவது அரச அதிகாரிகள் தமக்கேற்றவாறு பணியாற்றவில்லை என்பதையே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அரச அதிகாரிகள் என்பவர்கள் ஏதேனுமொரு அரசியல் கட்சிக்கு சார்பாக செயற்பட வேண்டியவர்கள் அல்ல.
அவர்கள் வௌ;வேறு காலங்களில் வெ வ்வேறு அரசாங்கங்களின் கீழ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களாவர். எனவே வழிகாட்டல்கள், ஆலோசனைகள் ஊடாகவே அவர்களிடமிருந்து எந்தவொரு சேவையையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அதனை விடுத்து அரசியல் ரீதியான நியமனங்களை வழங்கி அவர்களால் மாத்திரமே தாம் கூறுவதை செய்ய முடியும் என இவர்கள் நினைத்தால் அது தவறாகும். நாட்டிலுள்ள அரச உத்தியோகத்தர்களே இந்த அராசங்கம் ஆட்சியைப் பெறுவதற்காக பாடுபட்டனர். தற்போது மேலும் 60 000 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தேசிய மக்கள் சக்திக்காக செயற்பட்டவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த காலங்களில் அரச சேவை அரசியல் மயப்படுத்தியவர்களை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று அதனையே நடைமுறைப்படுத்துகின்றனர் என்றார்.