தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு குற்றவியல் அமைப்பு, என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இல்லை என்று சுவிஸ்ட்சர்லாந்து நாட்டின் பிராந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்காக நிதிசேகரிப்பில் ஈடுபட்டமைக்காக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 பேரின் வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதன்போது, விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிக்கும் இடையிலான தொடர்பு குறித்து சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று அறிவித்தது.
குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 பேரும் குற்றவியல் அமைப்பு ஒன்றுக்கு நிதித்திரட்டிய குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் 8 பேர் இந்த வழக்கில் இருந்து முற்றாக குற்றவாளிகள் இல்லை என்று அறிவித்து விடுவிக்கப்பட்ட அதேநேரம், ஏனைய நான்கு பேருக்கு மோசடி குற்றச்சாட்டின் கீழ் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி போலியான ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கடன்களை ஒழுங்கு செய்த ஒருவருக்கும், உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முகாமையாளருக்கு 24 மாதகால ஒத்திவைப்பு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் அந்த அமைப்பின் தலைவருக்கு 21 மாத ஒத்திவைப்பு சிறையும், அதன் பிரதி முகாமையாளருக்கு 20 மாத சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக 8 வாரங்களுக்கு இடம்பெற்ற நிலையில், அதற்காக அரசாங்கம் செலவிட்ட 4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்களை, குற்றம் சுமத்தப்பட்டவர்களே செலுத்த வேண்டும் என்று முன்னர் வாதிடப்பட்டது.
எனினும் இதனை அவர்கள் செலுத்த வேண்டியதில்லை என்றும், மாறாக அவர்கள் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் நட்டயீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் வழக்குக்கான குற்றம் சுமத்தப்பட்டிருந்தவர்களது சட்டத்தரணிகள் கட்டணத்தின் ஒருபகுதியையும் அரசாங்கமே செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வழக்கின் நிமித்தம் 5 மில்லியன் சுவிஸ்ஃப்ராங்களை அரசாங்கம் செலவிட நேர்ந்துள்ளது.

