விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து எனது வீட்டிற்கு வந்து என்னை விசாரித்தார்கள். திகதி மீண்டும் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் நான்கு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் என்னையும் எனது குடும்பத்தையும் மிரட்டும் வகையில் விசாரணை அமைந்திருந்தது.
இந்தியாவில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டமையால் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென இந்தியா பணத்தினை தந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட சொல்கின்றதா என விசாரணைகளை மேற்கொண்டனர்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவு போன்று காட்டிக் கொண்டாலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கின்றது.
இந்திய அரசாங்கம் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டிருந்ததையும் நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
இந்தியா இங்கு என்ன செய்யுமாறு தங்களை பணித்துள்ளார்கள்? ஆயுதம், பணம் என்பவற்றை வழங்கி விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவா தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டார்கள்.
ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற எம்மை இவ்வாறான அடக்குமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சித்தால் அது வேறு விளைவினை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சொல்ல விரும்புகின்றோம்.
தினமும் ஆவணங்களை வழங்குமாறு தொலைபேசி அழைப்பு எடுக்கிறார்கள். இத்தகைய விசாரணைகள் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.