தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது மக்களை அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் (K.Sukash) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் எந்த நாட்டிடமும் கடன் கேட்டுப்பிச்சை எடுத்திருக்கவில்லை.அவர்கள் தமது நிலங்களையோ, வளங்களையோ எந்த நாட்டிற்கும் விற்பனை செய்திருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் வெளிநாடுகளின் போர் வீரர்களைத் துணைக்கு அழைத்துப் போரிட்டிருக்கவில்லை. அவர்கள் எந்தவொரு சிங்களப் பெண்ணையும் துஷ்பிரயோகம் செய்திருக்கவில்லை.
உச்சமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், யாழ்ப்பாணம் கோட்டைப் பெருஞ்சமரின் போது கோட்டைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த சிங்கள இராணுவம் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீருமின்றித் தவித்தபோது உணவையும், நீரையும் இராணுவத்திற்கு அனுப்பி மனிதாபிமானத்தின் எல்லைவரை சென்றவர்கள் அவர்கள்.
ஆனால் நீங்களோ பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட் கொடுத்துவிட்டுச் சுட்டுப்படுகொலை செய்தவர்கள்.இப்பொழுது கூறுங்கள் சரத் பொன்சேகா (Sarath Fonseka) யார் படிப்பறிவற்றவர்கள் என்று என தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]