உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குச் சாவடியொன்றுக்குள் பெரும் நச்சுப் பாம்பு புகுந்து சாவகாசமாகப் படுத்துக் கொண்டது. அங்கிருந்த அலுவலர்கள் அதை விரட்ட முடியாது ஓடித் திரிந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வலி.மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தொல்புரம் கிழக்கு விக்கினேஸ்ரா வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையம் என்பன ஒழுங்கமைக்கப்பட்டன.
அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாகக் செய்யப்பட்ட திருப்தியில் அலுவலர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். வழமையான மேற்பார்வைக் கடமைக்காக அங்கே உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அவதானித்துக்கொண்டிருந்தார்.
அப்போது பெரிய நச்சுப் பாம்பு ஒன்று வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் புகுந்துகொண்டது. அதைக் கண்ட அலுவலர்கள் பரபரப்படைந்து அங்கு மிங்கும் ஓடித்திரிந்தனர். பாம்பை அங்கிருந்து வெளியேற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. பாம்பு சாவகாசமாக அங்கிருந்த பெட்டி ஒன்றுக்குள் சுருண்டு படுத்துக் கொண்டது.
வேறு வழியின்றி ஒருவர் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்தப் பெட்டியை நெருங்கி மெதுவாகத் தூக்கினார். அப்படியே கொண்டு ஓடிச் சென்று பாம்பை வீசியெறிந்தார். அதன்பின்னரே அங்கு பரபரப்புத் தணிந்தது. அலுவலர்கள் ஆசுவாசப் பெருமூச்சு விட்டனர்.