இந்த ஆண்டு தொடக்கத்தில் இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து வாகன இறக்குமதி மாத்திரம் ரூ. 165 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுங்க மேலதிக பணிப்பாளர் சீவலி அருக்கொட, இந்த ஆண்டு வருவாய் இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டிச் செல்லும் பாதையில் திணைக்களம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“2024 ஆம் ஆண்டில், எங்கள் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது, அதனை ரூ. 1,535 பில்லியனுடன் முடித்தோம். இந்த ஆண்டு, ஜூன் நடுப்பகுதியில், நாங்கள் ஏற்கனவே ரூ. 900 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
14,000 வாகனங்கள் இறக்குமதி
இதன்படி, அரசாங்கம் பெப்ரவரி 01, 2025 முதல் மோட்டார் வாகன இறக்குமதியை அனுமதித்ததிலிருந்து, சுமார் 14,000 வாகனங்கள் கொண்டு வரப்பட்டு ரூ. 165 பில்லியனை வருவாய் ஈட்டியதாக அருக்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த எண்ணிக்கை ஆண்டு இறுதிக்குள் ரூ. 450 பில்லியனை எட்டும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.