கிரிக்கெட் விளையாட்டில் போன்று என்றாவது ஒருநாள் வலைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய சகல வளங்களும் இலங்கைக்கு இருப்பதாகவும் அது விரைவில் ஈடேறும் என நம்புவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை வலைபந்தாட்ட அணி தொடர்பாக திருப்தி அடைகின்றீர்களா என அமைச்சரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘உலக வலைபந்தாட்ட தரவரிசையில் இலங்கை 17ஆவது இடத்தில் இருப்பது திருப்தி தரக்கூடிய ஒன்றாகும். அதனையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். கிரிக்கெட்டில் போன்று என்றாவது ஒருநாள் வலைபந்தாட்டத்திலும் இலங்கையினால் சம்பியனான முடியும் என நான் கருதுகிறேன். அதற்கான சகல வளங்களும் வசதிகளும் இருக்கின்றன.
‘வலைபந்தாட்ட தேர்வைப் பொறுத்த மட்டில் சில மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டன. விளையாட்டுத்துறையில் இது வழமையான ஒன்றாகும். திறமையான ஒருவரின் வாய்ப்பு நழுவும்போது இத்தகைய மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்படுவதுண்டு. எவ்வாறாயினும் கோவிட் – 19 நிலைமையைக் கருத்தில் கொண்டு 15 வீராங்கனைகளை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதனை சாதகமாக்கிக் கொண்டு எமது அணியினால் வெற்றிவாகை சூட முடியும் என நான் நினைக்கிறேன்’ என்றார்.
தேசிய வலைபந்தாட்ட முன்னாள் அணித் தலைவிகளான செமினி அல்விஸ், கயனி திசாநாயக்க, சத்துரங்கி ஜயசூரிய, தர்ஜினி சிவலிங்கம் ஆகிய அனுவாலிகளுடன் கயஞ்சலி அமரவன்ஷவின் தலைமையிலான இலங்கை வலைபந்தாட்ட அணி, ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றவதற்கென நாளைய தினம் இங்கிருந்து பயணமாகிறது.
இலங்கை வலைபந்தாட்ட அணியின் உதவித் தலைவியாக துலங்கி வண்ணிதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் எதிர்வரும் 3ஆம் திகதிமுதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை உட்பட 11 நாடுகள் 4 குழுக்களில் பங்குபற்றுகின்றன.
முதல் சுற்றில் இந்தியாவையும் பிலிப்பைன்ஸையும் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.