தயாரிப்பு: எஸ். ஜே. எஸ். பிக்சர்ஸ்
நடிகர்கள்: வைகுண்ட செல்வன், சிவச்சந்திரன், வெங்கடகிரி, ஜெயதேவ், நடிகை சிவ சந்தியா, லதா இசை மற்றும் பலர்.
இயக்கம்: ராஜபார்த்திபன்
மதிப்பீடு: 1.5 / 5
ஆர்த்தி (சிவ சந்தியா) பிரியா ( லதா இசை) என இரண்டு இளம் பெண்கள், மூலிகை தொடர்பான ஆய்வு செய்வதற்காக அடர்ந்த வனப்பகுதிக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு வழி காட்டுவதற்காக பயந்தாங்கொள்ளியான ஆண் ( சிவச்சந்திரன்) ஒருவரும் இணைகிறார். இந்த மூவரும் காட்டிற்குள் செல்கிறார்கள். அவர்கள் பயணத்தின் போது எதிர்கொள்ளும் சவால்கள், சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பின்னணி… இவர்களின் நோக்கம் …என ஒவ்வொன்றாக பார்வையாளர்களுக்கு தெரிய வரும் போது, சுவாரசியமான சாகச திரில்லர் கதையாக திரைக்கதை விரிவடைகிறது.
மூலிகைகளை வைத்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானி ஒருவர், அவர் கண்டுபிடித்த மூலிகை மருந்து, நம் நாட்டுக்கு பயன்படாமல்… மோசமான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து வெளிநாட்டிற்கு அதன் காப்புரிமையை நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர். இதனால் ஆத்திரமடையும் அந்த விஞ்ஞானி, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டு, தனியாக ஆய்வு நடத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை மருந்தை கண்டுபிடிக்கிறார். இந்த மருந்தை கைப்பற்ற பல அடுக்கு முயற்சி நடைபெறுகிறது. இதிலிருந்து தப்பித்து அந்த மூலிகை இந்திய நாட்டிற்கு பயன்பட்டதா? இல்லையா? விஞ்ஞானி கொலை செய்யப்படுகிறாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் திரைக்கதை.
படத்தின் திரைக்கதை முழுவதும் அடர்ந்த வனத்திற்குள் பயணிக்கிறது. நாயகிகள் இருவர், அவருடன் ஒரு நகைச்சுவை நடிகர், வனத்துறை அதிகாரி, வனத்திற்குள் வந்து செல்லும் கும்பல், காவல்துறை அதிகாரி, விஞ்ஞானி, விஞ்ஞானியின் உதவியாளர்… என கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்டிற்குள்ளிருந்து கதையை நகர்த்துகிறார்கள். முன்பாதியை விட, பின் பாதி சற்று விறுவிறுப்பாக இருக்கிறது.
இன்றைய சூழலில் தலைவலி என்றால் மாத்திரை.. வயிற்று வலி என்றால் மாத்திரை… என எல்லா வலிகளுக்கும் மாத்திரை வந்துவிட்டது. இவ்வளவு ஏன் தாம்பத்திய உறவில் வலிமை கிடைப்பதற்காகவும் பிரத்யேக மாத்திரை சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் மாத்திரை மாத்திரை… என்று மக்கள் விரும்புவதால், அவர்களிடத்தில் இயல்பாகவே இருக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது. இதனால் சிறிய அளவிலான தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் மரணமடைகிறார்கள். இதற்காக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு மூலிகைகளால் மருந்து ஒன்று தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
கதாசிரியரின் நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும்… அதற்கான திரைக்கதை வனத்திலேயே அமைவதாலும், நடிகர்கள் மக்களுக்கு பரிச்சயம் அல்லாத புது முகங்களாக இருப்பதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருப்பதாலும்.. படத்தின் தலைப்பிற்கு ஏற்ப.. மக்களின் ஆதரவு குறைவாகவே இருக்கிறது.
எம் என் ரஹீம் பாபுவின் ஒளிப்பதிவும், ஸ்ரீ சாய் தேவின் இசையும், குறைந்தபட்ச தரத்தில் இருந்தாலும், இயக்குநருக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
வலு- சக்கை