வழிநடத்தல் குழுவுக்கு நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் 6பேரின் இணக்கத்துடன் கடந்த வாரம் சமர்பிக்கப்பட்ட வரைவு நகலுக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருவர் மாத்திரம் இதுவரை இணங்கவில்லை என்று தெரியவருகின்றது.
வழிநடத்தல் குழுவின் கூட்டம் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. நிபுணர் குழுவின் 6 உறுப்பினர்கள் அரசமைப்பு வரைவுக்கான நகலைச் சமர்ப்பித்தனர். இரண்டு உறுப்பினர்கள் இன்னொரு வரைவு நகலைச் சமர்ப்பித்திருந்தார்கள்.
6 உறுப்பினர்களின் இணக்கத்துடன் சமர்பிக்கப்பட்ட வரைவு நகலில், அரச தலைவர் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்குள்ளாகினால் அவரை தலைமை அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் இணைந்து உறுதிப்படுத்தினால் பதவியிலிருந்து நீக்கலாம் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.மகிந்த அணியினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16பேர் குழுவினர் இந்த விடயத்தைக் கையிலெடுத்து நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்கள். திருட்டுவழியில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
நிபுணர் குழுவின் உறுப்பினர்களுக்கு, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஜயம்பதி விக்கிரமரட்ன ஆகியோர் அழுத்தங்களைக் கொடுப்பதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்கள். நிபுணர் குழுவின் கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நிபுணர்குழு கடந்த வாரம் கூடியிருந்தது. 6பேரின் இணக்கத்துடன் சமர்பிக்கப்பட்ட வரைவுக்கு மேலும் 3 பேர் இணக்கம் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டிலுள்ள நிபுணர் ஒருவர் மற்றும் வழிநடத்தல் குழுவின் கடந்த அமர்வுக்கு தனியான வரைவு சமர்பித்த இரண்டு நிபுணர்களில் ஒருவர் உள்ளிட்ட 3பேரே தற்போது முன்னைய வரைவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் நிபுணர் குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது. இதேவேளை வழிநடத்தல் குழுவின் அமர்வு, அடுத்த மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் கூடும் என்று தெரியவருகின்றது.
