தமிழகம், வட மாநிலங்களில் கடலைக்காய் விளைச்சல் பாதிப்பால், கடலை எண்ணெய் டின்னுக்கு ₹300 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, உடுமலைபேட்டை, தாராபுரம், காங்கேயம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விருத்தாசலம் உள்பட பல பகுதிகளிலும், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் கடலைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவில் நிலக்கடலை சாகுபடி கிடைக்காததால், மார்க்கெட்டு வரத்து 20 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை மொத்த தாவர எண்ணெய் வியாபாரிகள் கூறுகையில், ‘தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் நிலக்கடலை விளைச்சல் சரிந்துள்ளது. மேலும், சமீபகாலமாக பர்பி தயாரிக்கும் கம்பெனிக்கு நிலக்கடலை அதிகளவில் செல்கிறது. இதன் காரணமாக, எண்ணெய் அரவை ஆலைகளுக்கு வழக்கத்தை காட்டிலும் கடலைக்காய் வரத்து குறைந்துள்ளது. கடலை எண்ணெய் ஆலைகளில் உற்பத்தி குறைந்ததால், கடந்த இரு மாதத்தில் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15 கிலோ டின் ₹2 ஆயிரத்திற்கு விற்றது. இரு மாதத்தில் படிப்படியாக டின்னுக்கு ₹300 அதிகரித்து, தற்போது 15 கிலோ டின் ₹2300 என விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.
