இலங்கையின் தேயிலை – இறப்பர் தொழிற்துறையில் பெருந்தோட்டம் – சிறுதோட்டம் என்ற பேதப்படுத்தலானது வம்சாவளி அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைப் பாராளுமன்றில் குரல் கொடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இந்தக் கருத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஒவ்வொரு செப்டெம்பர் மாதமும் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை வருடாந்த ஒன்று கூடலின் இணைக் கூட்டத் தொடர்களில் ஒன்றாக ஐ.நாவுக்கான ஜேர்மனிய தூதரகத்தின் ஊடாக இணைய வழியாக இணைந்து கொண்டு மேற்படி கருத்தினை முன்வைத்திருப்பதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
வம்சாவளி மற்றும் தொழில் சார்ந்து பேதப்படுத்தலுக்கு உள்ளதாலுக்கு எதிராக (Discrimination Based on Work & Descent) எனும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இலங்கையில் (இந்திய) வம்சாவளி மற்றும் தொழில் ( பெருந்தோட்டம்) சார்ந்து பேதப்படுத்துலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் எமது மலையகப் பெருந்தோட்ட சமுதாயம் சார்ந்து எனது கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜேர்மனிய தூதரகத்தின் ஊடாக இன்று (செப் .14) முன்வைத்தேன்.
2015 , 2019 என இரண்டு தடவைகள் ஐக்கிய நாடுகள் சபை சூழலுக்கு சென்று எடுத்த முயற்சிகள் இம்முறை ஒரு படி மேலே சென்றுள்ளதை உணர முடிந்தது. கடந்த வருடம் செனகல் ( ஐ.நா வுக்கான ) நாட்டு தூதரகத்தின் ஊடாக நேரடியாகவும் இம்முறை இணைய வழியாக ஜேர்மனிய ( ஐ.நாவுக்கான ) தூதரகத்தின் ஊடாகவும் எடுத்த முயற்சி இன்னுமொரு கட்டத்தை அடைந்திருக்கிறது.
இந்த நோக்கத்துக்காக 2019 இல் உருவாக்கப்பட்ட சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அமையத்தின் (International Parliamentarian Forum for DWD) உறுப்பினராக இந்த முயற்சி வெற்றியளித்தது.
பாராளுமன்ற உறுப்பினராக இப்போது இல்லாத போதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கலாம் என்கின்ற அடிப்படையில் எனது பிரசன்னம் அமைந்தது.
இதேபோல ஜேர்மனி, பிரேசில், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் தாம் எவ்வாறு பேதப்படுத்தப்படுகிறோம் என்பதை முன்வைத்தனர்.
ஐ. நாவுக்கான ஜேர்மனிய தூதுவர் முழுமையாக உரைகளை செவிமடுத்து சாதகமான பதிலுரை வழங்கி இருந்தார். எமது மக்களின் பிரச்சினைகளை சர்வதேச கவனத்துக்குக் கொண்டு செல்வதுடன் அதற்கான தீர்வையும் தேடிச் செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நேரப்படி செப் 14 இரவு 7:30 முதல் 9 மணிவரை இந்த நிகழ்வு இணம்பெற்றுள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

