வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசிதழ் கடந்த 4ஆம் திகதி அரச தலைவரின் பதில் செயலர் சுமித் அபேசிங்கவினால் வெளியிடப்பட் டுள்ளது.
வடக்கு அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புச் செயலணி அமைக்கப்படும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் முற்பகுதியில் மட்டக்களப்பில் உரையாற்றிய அரச தலைவர், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான செயலணி அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.இவ்வாறானதொரு நிலையில் வடக்கு – கிழக்க மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. 48 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதன் செயலராக வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
‘போரின் பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவும் மாகாணங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் அரசால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளுக்கான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்பது எனக்கு தெரிய வந்துள்ளதாலும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சமநிலைப் பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான வருமானத்தின் விருத்திக்காக அபிவிருத்திச் செயற்பாட்டின் மூலம் அணுகுவது இன்றிமையாததெனக் கருதப்படுவதாலும் இந்தச் செயலணியை நியமிக்கின்றேன்’ என்று அரச தலைவர் மைத்திரிபால அரசிதழில் தெரிவித்துள்ளார்.
அரச தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளை நெறிப்படுத்தல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்தல் வேண்டும்.
செயலணியின் பணிகளாக 7 விடயங்களும் அரச தலைவரால் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தற்போது செயற்படுத்தப்படும் பல்துறைசார் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களின் முன்னேற்ற நிலமையை மீளாய்வு செய்தல்.
முன்னுரிமை அவதானம் தேவைப்படும் துறைகள் மற்றும் குழுக்களை இலக்கு வைக்கும் புதிய திட்டங்களை முன்னெடுத்தலும் நிதி வளங்களை அளித்தலும்.
மாகாணங்களின் அனைத்து அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் தேவையான போது தலையிடுதல், வழிகாட்டுதல்.
மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்து நடைமுறைப்படுத்துவதற்காக தனியார் துறை மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆதரவையும் பங்கேற்பையும் ஊக்குவித்தலையும் பெற்றுக்கொள்ளல்.
அரசுக்கும் மாகாண நிறுவனங்களுக்கும் இடையேயும் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகத் துறைகளுக்கு இடையேயும் பணிகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.
மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் நடைமுறைப்படுத்தல் பற்றிய ஒட்டுமொத்த கண்காணிப்பை நிறைவேற்றுதல்.
மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டங்களை துரிமாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருக்கின்ற ஏதேனும் தடைகளை இனங்கண்டு, அவற்றைத் தவிர்த்துக் கொண்டு, துரித தீர்வுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கல், என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தச் செயலணி உரிய பணிகளை முன்னெடுக்க சகல உதவிகளையும் சகல தகவல்களையும் வழங்கவேண்டும் என்று அரச பணியாளர்கள் அனைவருக்கும் அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.