வடக்கிற்கான வீட்டு திட்டம் தாமதம் ஆவதற்கு நான் காரணமில்லை என்று தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சா் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது:
வீட்டுத் திட்டத்திற்கான பொறுப்பு கடந்த ஆகஸ்ட் மாதமே என்னிடம் கையளிக்கப்பட்டது. தற்போது இரண்டு மாதம் தான் ஆகியுள்ளது. இந்நிலையில் என்னை திட்டுவது ஏற்புடையது அல்ல. என்னை திட்ட வேண்டும் என்றால் வேறு காரணங்கள் கூறி திட்டுங்கள். வீட்டுத் திட்டம் தாமதம் எனக் கூறி திட்டாதீர்கள்.
எங்கள் அரசாங்கம் எனக்கு வீட்டுத் திட்டம் வழங்க அனுமதித்து உள்ளது. அதனை நல்லிணக்க அமைச்சுக்கு கொடுக்க வேண்டாம் என யாரும் தடுக்க முடியாது. யாருக்கு எதனை கொடுப்பது என்பதனை ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள். மற்றவர்கள் அது பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
பகையாளியாக என்னை பார்க்காதீர்கள் வடக்கு, கிழக்கில் பல தமிழ் கட்சிகள் உண்டு. எம்மை பகைமை உணர்வோடு பார்க்காதீர்கள் நட்புடன் பாருங்கள். பகைமை முரண்பாட்டு இருக்க கூடாது நட்பு முரண்பாடு இருக்கலாம். பகைமை முரண்பாடு இருந்தால் அது எதிரிக்கு தான் வாய்ப்பு. என்று தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.