நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பாரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருவதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’. அரசாங்க அனுசரணையுடன் கூடிய கல்வி கற்பித்தலைக் குறித்தும், தனியார் மயமாக்கப்பட்ட கல்வி குறித்தும், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வை மையப்படுத்தியும் தயாரான இந்த திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடத்தில் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்திய மதிப்பில் 51 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தைல் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படமும், வணிக ரீதியிலான வெற்றியைப் பெற்றிருக்கிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.