வங்கதேசத்தில் கடந்த 1991-96, 2001-2006-ம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. இவர் கடந்த 2001-2006 வரையிலான காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் நடத்தி வரும் ‘ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை’க்கு வெளிநாட்டில் இருந்து பெற்ற நன்கொடையில் ரூ.1.62 கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் தாகா சிறப்பு நீதிமன்றம் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என கலிதா ஜியா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.மேலும் ஜாமினில் விடுதலை செய்யவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதிகளான இனாயத்துர் ரஹ்மான், ஷாஹிதுல் கரீம் ஆகியோரை கொண்ட அமர்வு முன் கலிதாவின் மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கலிதாவிற்கு 4 மாத இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.