ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தின் போதே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் இந்த அழுத்தங்களைப் பிரயோகிக்கவுள்ளார்.
அன்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ள அறிக்கையில், இலங்கை மீது தனது விமர்சனம் கலந்த அதிருப்தியை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, பிரேரணை நிறைவேற்றப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என்ற அதிருப்தியை அவர் முன்வைப்பார் எனத்தெரிகிறது.
அதேவேளை, பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதம் அடைந்தால் அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
