அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் போர்டர் – காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா பலமான நிலையை அடைந்துள்ளது.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா குவித்த அபார சதம் மற்றும் ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன இந்தியாவை பலமான நிலையில் இட்டன.
அவுஸ்திரேலியாவை 177 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா போட்டியின் 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை (10) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவை விட 144 ஓட்டங்களால் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, ஆரம்ப வீரர் ரோஹித் ஷர்மா குவித்த சதத்தின் உதவியுடன் நல்ல நிலையை அடைந்தது.
இராக்காப்பாளனாக முதல் நாள் ஆடுகளும் நுழைந்த ரவிச்சந்திரன் அஷ்வின் 23 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சேத்தேஷ்வர் புஜாரா (7), விராத் கோஹ்லி (12), அறிமுக டெஸ்டில் விளையாடும் சூரியகுமார் யாதவ் (8) ஆகிய மூவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றனர்.
இந் நிலையில் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த ரவிந்த்ர ஜடேஜா 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்கள் பகிரப்படுவதற்கு உதவினார்.
மறுபுறத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா 212 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 120 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இது ரோஹித் ஷர்மா பெற்ற 9ஆவது டெஸ்ட் சதமாகும்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு அறிமுக வீரர் ஸ்ரீகர் பாரத் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (240 – 7 விக்.)
ஆனால் அதன் பின்னர் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்ட ரவிந்த்ர ஜடேஜாவும் அக்சார் பட்டேலும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 81 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை மேலும் பலப்படுத்தினர்.
ரவிந்தர ஜடேஜா 66 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் டொட் மேர்ஃபி 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.