ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த கால்பந்து வீரர் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய கிளப் அணிகளில் விளையாடும் சிறந்த கால்பந்து வீரரை தேர்ந்தெடுத்து ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டில் விருது பெறத் தகுதியான வீரர்களின் பட்டியலை 80 பயிற்சியாளர்கள் மற்றும் 55 பத்திரிகையாளர்கள் கொண்ட குழு பரிந்துரைத்திருந்தது. இந்த பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி, கியன்லூகி பபன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் விருதுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரியல் மாட்ரிட் அணிக்காக 2016-17-ம் ஆண்டுகளில் நடந்த கால்பந்து போட்டிகளில் 12 கோல்களை அடித்ததற்காக அவர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

