நடிகர் விஷ்ணு விஷாலின் பெரியப்பா மகனான ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றி புதுமுக நடிகர் ருத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில், ”அப்பா நம்மை கையில் தூக்கி வைத்து இருந்தால்… அண்ணன் தோளில் தூக்கி வைத்திருப்பார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அதற்காகத்தான் இந்நிகழ்ச்சிக்கும் வருகை தந்தேன். நான் திரையுலகில் அறிமுகமாகும்போது அனைவரும் எமக்கு அன்பும் ஆதரவும் அளித்தார்கள். அதனை திரும்பக் கொடுக்கவே இங்கு வந்தேன். இந்தப் படத்தின் பாடல்களும் இசையும் முன்னோட்டமும் பார்த்தேன். ஜாலியாக இருக்கிறது. ரசிகர்கள் பட மாளிகைக்கு மகிழ்ச்சியாக பொழுதைக்கழிக்கவே வருகிறார்கள். அந்த வகையில் இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகரும் இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
