தமிழில் கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ், அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். கைதியின் வெற்றியைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகாரம் படமும் அர்ஜுன் தாஸுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொடுத்தது.
இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
தற்போது வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ள அர்ஜுன் தாஸ், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் – கமல் கூட்டணியில் உருவாக உள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இப்படி தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் அர்ஜுன் தாஸ், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா எனும் மலையாள படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.