யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களைக் குடியேற்றுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனிடம் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்துக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசித்த இடங்களிலிருந்து புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களுக்காகவும் அவர்களிலிருந்து உருவாகிய பரம்பரையினருக்காகவும் காணியைப் பெற்றத் தருமாறு அமைச்சர் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு இடம்பெயர்ந்த 780 குடும்பங்கள் தற்பொழுது இனம்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை குடியேற்றுவதற்கும் அவர்களது பொது விவகாரங்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கும் 1000 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவை எனவும் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தத்தினால் காணிகளை இழந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியிருந்த முஸ்லிம்கள் தற்பொழுது புத்தளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள முகாம்களில் குடியிருந்து வருகின்ற நிலையில், அமைச்சரின் கோரிக்கையை எந்தவித நியாயங்களும் இன்றி வட மாகாண முதலமைச்சர் புறக்கணித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.