ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதனையும் அரசியல் பழிவாங்கல் என்றா எதிரணியினர் குறிப்பிடுவார்கள் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி கேள்வியெழு்பினார்.
மாத்தறையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். இது தெடார்பில் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சியினரின் விநோத செயற்பாடு
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களின் ஆட்சியில் சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாட்டு மக்கள் இதனூடாக விளங்கிக்கொள்ளலாம் .

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்குவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். இதனை எவ்வாறு அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது என்பதை நாட்டு மக்கள் மறக்க கூடாது.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் வலியுறுத்துகின்ற நிலையில் எதிர்க்கட்சியினர் சட்டத்தின் முன் பாரபட்சம் பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
பல குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தான் இன்று ஒரு அணிக்கு திரண்டுள்ளார்கள். ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது ஒன்றும் புதிதல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.